aobout us


அரசியல் முகவரியைப் பெற்ற அரசியல் தலைவர்கள் வாய்மூடி மௌனியாக இருப்பதன் மர்மம் என்ன?

Posted by Kattankudi Web Community on 17/03/2013
68026_434086646650109_1039665645_n (1)- எஸ்.அஷ்ரப்கான் -
அரசியல்வாதிகள் அபிவிருத்திகளுக்காகவோ, சலுகைகளுக்காவோ முஸ்லிம் சமூகத்தை அடகு வைத்து விடக்கூடாது. என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எச்.எச்.எம். நபார் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு எதிராக தீய சக்திகளால் ஏற்பட்டு வரும் அநியாயங்கள், அட்டூழியங்களுக்கு எதிராக குரல்கொடுக்க முன்வருமாறு முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு விடுத்துள்ள  வேண்டுகோள் அறிகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அதில் தொடர்ந்தும் குறிப்பிடும்போது,
இலங்கையில் எத்தனையோ விதமான முஸ்லிம் அரசியல் தலைவர்கள் தோற்றம் பெற்றிருக்கிறார்கள். எஸ்.டப்ளியு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் காலத்தில் டாக்டர் பதியுதீன் மஹ்மூத் அவர்களும், ஜே.ஆர். ஜயவர்த்தனாவுடைய காலத்தில், ஏ.ஆர். மன்சூர் அவர்களும், அதற்கு பிறகு ஆகோரமான யுத்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தினுடைய அரசியல் விமோசனத்தை பெற்றுத்தர காரணமான தலைவராக மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும் தோற்றம் பெற்றிருக்கிறார்கள். இவ்வாறு இருந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் தமது இனத்திற்கு எதிரான விடயங்கள் வருகின்றபோது சுமுகமான முறையில் தீர்வுகளைக்கண்டிருக்கிறார்கள்.
தீர்வுகளில் பெரும் தலைவர் அஷ்ரபுடைய காலத்தில் வந்த ஏராளமான பிரச்சினைகளை ஒரு தனி நபராக நின்று முஸ்லிம் சமூகத்தினுடைய பிரச்சினைக்கு முகம்கொடுத்து, முஸ்லிம்  சமூகத்திற்காகவே தனது உயிரையும் தியாகம் செய்த ஒரு பெரும் தலைவர். ஆனால், அவர் மூலமாக அரசியல் முகவரியைப் பெற்ற அரசியல் தலைவர்கள் வாய்மூடி மௌனியாக இருப்பதன் மர்மம் விளங்கவில்லை.
இன்று முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தோற்றம் பெற்றிருக்கின்ற பிரச்சினைகளை எடுத்து நோக்குகின்றபோது, இந்த அரசாங்கத்தால் 1வது பிரச்சினையாக இஸ்லாமிய மத விடயத்தில் தொழுகைக்காக பாங்கு (அதான்) ஒலிப்பதை தடுத்தது. அடுத்து பள்ளிவாயல்களை, இறைவனுடைய இல்லங்களை உடைத்தது. அதற்கடுத்து, முஸ்லிம்களுடைய உணவு (ஹலால்) விடயத்தில் கை வைத்தது. இன்று ஹலால் விடயத்தில் தாங்கள் வெற்றிபெற்றதாக நினைத்து, அதற்குப்பிறகு முஸ்லிம் சமூகத்தினுடைய பெண்மணிகளின் ஒழுக்கத்தின் சின்னமான பர்தாக்களை அணிவதை தடுப்பதற்கு பொதுபல சேனா என்கின்ற அமைப்பு அரசியல் அதிகார பின்புலத்தில் இருந்து கொண்டு முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஒடுக்க எத்தனித்து வருகிறது.
அன்புள்ள அரசியல் வாதிகள் இப்போது முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக தோற்றம் பெற்றிருக்கின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எங்களுடைய அரசியல் பதவிகளையும், பதவிகள் மூலமாக வருகின்ற சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டிராமல், பதவிகளை துக்கி எறிந்து விட்டு எமது சமூகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்ற காலகட்டத்தில் நாம் சமூகத்திற்கு குரல் கொடுக்கின்றவர்களாக மாற வேண்டும். தேர்தல் காலங்களில் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வாக்குகளை பெற்றுவிட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆமா போடுகின்ற நிலை மாற வேண்டும்.
அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபை முஸ்லிம்களுடைய பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்ற சக்தியாக இருந்தாலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் பலயீனமானவர்களாக இருப்பதன் காரணமாக அது ஒரு பலயீனமாக அமைப்பாக மாறிக் கொண்டிருக்கின்றது.  இதன் விளைவு சிங்கள பேரினவாதிகளின் பொதுபலசேனா என்ற அமைப்பு எமது சமூகத்தினை ஒடுக்குகின்ற நிலை இருக்கின்றது.
எனவேதான், இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் அணைவரும் ஒன்று சேர்ந்து இந்த பேரினவாத சக்திகளுக்கு பேரிடி கொடுக்கின்ற நிலையை உருவாக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு வீடுக்கின்றேன் என்றார்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...