Tuesday, February 6, 2018



குழந்தைப்பருவ ஆளுமை வளர்ச்சியில் முன்பள்ளி கற்றலின் அவசியம் ஏன் ?


நோக்கம்
ஒரு நாட்டின் முன்னேற்றத்தை நிர்ணயிப்பதில் வகுப்பறை முக்கிய பங்கு ஏற்கிறது. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையில் ஒரு சில நிலைகளில் எவ்வித காரணமில்லாமல் கற்றல் விகிதமானது அதன் உச்ச நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் மனதில் தக்க வைத்துக் கொள்ளும் கருத்துக்களை மற்ற எந்த நேரத்திலும் அல்லது நிலைகளிலும் முடியாமல் போகிறது. எனவே இந்த (வேளை) காலம் உணர்ச்சிமிக்க காலம் (sensitive period) அல்லது ஆராயும் பருவம் எனப்படுகிறது. இப்பருவத்தில் தான் குழந்தைக்குத் தன் திறமைகளை வளர்த்துக் கொள்ள மற்றைய காலங்களை விட அதிகப்படியான செயலாற்றும் திறன் உச்சநிலையிலுள்ளது.
ஒரு குழந்தைக்கு எத்தகைய சாதகமான சுற்றுப்புற சூழ்நிலையிலிருந்தாலும் அக்குழந்தை குறிப்பிட்டமுதிர்ச்சிநிலையை அடையும் வரை அதனால் கற்க இயலாது. முறையான நல்ல வளர்ச்சி ஏற்படுவதற்கு நல்ல சாதகமான சூழ்நிலை அத்தியாவசியமான ஒன்றாகிறது. நல்ல சூழ்நிலை என்பது குழந்தைக்குத் தூண்டுகோலாகவும், நல்ல (உடன்பாடான) உறுதியான அனுபவங்களை கொடுக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். அத்தகைய சூழலே குழந்தைக்கு சலிப்பினைப் போக்கி தன்னகத்தே மறைந்துள்ள திறமைகளையும் தனித்தன்மையையும், விருப்பங்களையும் வெளிப்படுத்த உதவுகிறது. குழந்தை வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இரண்டும் ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக இருப்பதால் கற்றலும் முதிர்வடைதலும் அதனைப் பொறுத்தே அமைகிறது. வெறுமையான (வெற்றிடத்தில்) சூழ்நிலையில் முறையான கற்றல்நிகழாது. ஏனெனில் அதற்குத் தூண்டுதலான சூழ்நிலையும் இனிமையான அனுபவங்களும் இருந்தால் தான் குழந்தை உலகினைப் பற்றி ஆராய உதவும்.
குழந்தைகளின் ஒன்றிணைந்த ஆளுமை வளாச்சி
உடல் இயக்க வளர்ச்சிஎல்லாக் குழந்தைகளுக்கும் கற்பதற்கு உரிமை உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை முறையான வழியில் அடைய உதவுதல் வேண்டும். குழந்தைகளின் ஆரம்ப கால பருவங்களைப் பற்றி கல்வியாளர்கள் அதிக அக்கறை கொண்டு கவனம் செலுத்தினார்கள். குழந்தையின் வளர்ச்சியில், முதல் ஆறு வருடங்கள் முத்திரை பதிக்கக்கூடியவையாக உள்ளது. ஏனெனில் இந்தப் பருவத்தில் தான் அடிப்படை நீதி, உடல், சமூக, மன எழுச்சி, மொழி மற்றும் கலை வளர்ச்சிக்கு வித்திடப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் ஒருங்கிணைந்த வளர்ச்சியைக் கீழ் வரும் முறையில் விளக்கலாம்.
  • குழந்தையின் முழுமையான வளர்ச்சி
  • கலை வளர்ச்சி
இந்நிலையானது குழந்தைப்பருவத்தில் மிகமுக்கியமான ஒன்றாக உள்ளது. இப்பருவத்தில் தான் குழந்தையின் எண்ணங்கள், ஆர்வங்கள், நேயங்கள் போன்றவை வளர்ச்சியடைகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின்பால் மிகுந்த அன்பு கொண்டிருந்தாலும் தங்கள் குழந்தைகளை வழிநடத்திச் செல்லவும், பயிற்சியளிக்கவும் போதுமான திறமையுடையவர்களாய் இருப்பதில்லை. அதைப்பற்றிய அறிவையுடையவர்களும் வறுமையால் வாடுவதாலும் அல்லது நவீன கால வாழ்க்கை முறையாலும் நேரமின்மையால் துன்பப்படுகின்றனர். சமுதாய வாழ்வில் ஏற்படும் மாற்றங்களாலும், தொழில் வளர்ச்சி அடைவதாலும் தற்போது குழந்தைகளின்பால் அதிக கவனம் செலுத்துதல் அவசியமாகிறது. நல்ல தரமான பால்வாடிகள், நர்சரி பள்ளிகள் மற்றும் முன் பருவப் பள்ளிகள் தொடங்கினால் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவும். பள்ளிப் பருவக் கல்வியானது குழந்தைகளின் ஆரோக்கியமான மனம் மற்றும் மன எழுச்சி வளர்ச்சிக்கு முக்கிய தேவையான ஒன்றாகிறது.

முன்பள்ளியின் (Preschool) அவசியம்

  • அகராதிப்படி குழந்தைக்கு முன்பள்ளி என்பது ஆரம்ப நிலை கல்விக்கான ஒரு நிறுவனம். பெற்றோர்களுக்கு அது ஒரு பொதுவான இடம். அதில் ஆசிரியரின் தலைமையில் குழந்தைகள் கூடி, மகிழ்ந்து விளையாடி தங்கள் நேரத்தை ஒன்றாகக் கழிக்கிறார்கள்.
  • முன்பள்ளி முறையான கல்வி பயிலும் ஒரு இடமல்ல. அது குழந்தைகள் முதன்முதலாக தங்கள் சுதந்திரத்தை (அனுபவிக்கும்) உணரும் ஒரு இடமாகும். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளின் வாழ்க்கையில் முன்பள்ளி தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக உள்ளது. குழந்தைகளின் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் போது குழந்தைகளை அவர்களது பெற்றோரிடமிருந்து சில மணி நேரங்களுக்குப் பிரித்து வைப்பதன் மூலம் அவர்களுக்கு பிரிவுத்துயர் ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது.
  • இப்பள்ளிகளில் முன்பள்ளியின் அனைத்து அடிப்படை கற்றல் முறைகளிலும் பயிற்சிக்கப்படுவதாலும் வெளிப்படுத்துவதாலும் அவர்களுக்கு சுதந்திர உணர்வு விரைவாக ஏற்படுகிறது.இப்பள்ளியில் செய்யப்படும் சில செயல்முறைகள் குழந்தைகளுக்கு தன்னிலை உணர்த்தும் சில செயல்களான தானே உண்ணுதல், உடையணிந்து கொள்ளுதல், சுத்தத்தைப் பராமரித்தல், போன்ற அடிப்படை செயல்கள் உருவாக உதவுகிறது.
  • இதைப் போன்ற பள்ளியில் ஏற்படும் கற்றல் அனுபவங்கள் குழந்தைகளுக்கு அடிப்படைப் பண்புகளான, வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளுதல், தங்கள் உணவு மற்றும் விளையாட்டுப் பொருட்களை பகிர்ந்து கொள்ளுதல், தங்கள் உடைமைகளைப் பாதுகாத்தல் போன்றவை ஏற்படுத்த உதவுகிறது. தங்கள் வயதை ஒத்த மற்ற குழந்தைகளோடு கலந்துரையாடவும், புதிய வார்த்தைகளைக் கற்பதன் மூலம் விரைவாக மொழி வளர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.
  • விளையாட்டுப் பள்ளிகள் குழந்தைகளை பெரிய பள்ளிகளுக்குச் செல்வதற்குரிய தன்னம்பிக்கை மற்றும் தனித்தன்மையை வளர்த்து அவர்களைத் தயார்படுத்துகிறது.
  • குழந்தை ஆசிரியர் விகிதம் சரியாக பேணப்பட்டு வரும் நல்ல முன்பள்ளியில் விளையாட்டிற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டு அதன் அவசியம் உணரப்படுகிறது. அறியாக் குழந்தைகளை வழிநடத்திச் செல்லும் ஒரு நல்ல வெளிச்சமுடைய விளக்காக முன்பள்ளி இருப்பதால் அது சிறந்த ஒன்றாக இருத்தல் அவசியம்.

முன்பள்ளியின் குறிக்கோள்கள்

  • குழந்தைகளுக்கு நல்ல உடல் வளர்ச்சி, மற்றும் தசை திறன் ஒருங்கிணைப்பு மற்றும் இயக்கத்திறன் வளர்ச்சியை ஏற்படுத்துதல்.
  • குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான சுகாதார பழக்கங்களை ஏற்படுத்தவும், உணவு உண்ணுதல், கழிப்பறை பழக்கங்கள், கை கழுவுதல், சுத்தப்படுத்துதல், நன்கு உடையணிதல் போன்ற தனிப்பட்ட இணக்கங்களை ஏற்படுத்த உதவும் செயல்களை செய்யவும் உதவுதல்.
  • குழந்தைகள் தங்கள் மன உணர்வுகளை முதிர்ச்சியான முறையில் வெளிப்படுத்தவும், உணர்ந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும், கட்டுப்படுத்தவும் வழிநடத்துதல்.
  • கலை உணர்வினை வெளிப்படுத்தும் தூண்டுகோலாக இருத்தல்.
  • தாங்கள் வாழும் உலகினைப் பற்றிப்புரிந்து கொள்ளவும், ஆராய்ச்சி செய்து கண்டறியவும், அவர்கள் அறிவு தாகத்தையும், ஆர்வத்தையும், தூண்டக்கூடிய சூழலை ஏற்படுத்துதல்.
  • குழந்தைகளின் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், அவர்களின் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் சரியான முறையில் உச்சரித்து வெளிப்படுத்த ஏதுவாக இருத்தல்.
  • முன்பள்ளியானது குழந்தைகளின் சரியான நேர்மையான எண்ணங்களான நம்பிக்கை, அன்பு, பாதுகாப்பு, சாதிக்கும் தன்மை, சகிப்புத் தன்மை, போன்றவற்றைக் கற்கவும் அவற்றை முறையான வழியில் வெளிப்படுத்த உதவும் செயல்களாக வரைதல், தோட்டமிடுதல் போன்ற செயல்களின் மூலமும் ஈடுபடுத்துதல்.
  • தங்கள் கலை உணர்வினை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அளித்துத் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும்,நிறங்கள், சமநிலை, இயற்கை அழகை ரசிக்க இன்ப சுற்றுலா அழைத்துச் செல்லுதல், அல்லது கலை அழகு மிக்க இடங்களுக்கு அருகில் நடக்க செய்தல் போன்றவற்றை ஏற்படுத்த கூடியதாகவும் நல்ல முன்பள்ளி இருத்தல் வேண்டும்.


No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...