Thursday, December 27, 2018



காத்தான்குடி நூலக அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான ஆலோசனைச் சபை ஒன்று கூடல்


காத்தான்குடியின் பொது நூலக அபிவிருத்தி வேலைத்திட்டமானது நகர முதல்வர் SHM.அஸ்பர் (JP) அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்தினை சிறப்பான முறையில் அமுல்படுத்துவதற்கு பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த நபர்களின்  ஆலோசனையையும் உள்வாங்கி  காத்தான்குடியில் சிறந்ததொரு பொது நூலகம் ஒன்றினை அமைப்பதற்கான பொதுச் சபை ஆலோசனைக் கூட்டம் கடந்த 27.12.2018 அன்று மாலை 04.30 PM க்கு பொது நூலக கேட்போர் கூடத்தில் நகர முதல்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் எதிர்கால பொது நூலகம் எவ்வாறான முறையில் அமையவிருக்கின்றது என்பதனை நகர முதல்வர் அவர்கள் தெளிவுபடுத்தியதோடு, இத்திட்டத்தினை முன்மாதிரியானதொரு திட்டமாக முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம், கொழும்பு. மொரட்டுவ போன்ற நூலகங்களை இதன் உத்தியோகத்தர்கள் தரிசித்து அனுபவங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர் எனவும் கூறப்பட்டது.

குறிப்பாக 10 வருடத்தினை அடிப்படையாகக்கொண்டதொரு திட்டத்தினை வகுத்து இதன் ஊடாக மாணவர் வாசிகசாலையொன்றினை உருவாக்கி பொற்றார் மற்றும் மாணவர்கள் பயன் அடையும் விதமாக எவ்வாறு இதனை முன்னெடுப்பது என்ற கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இதில் கலந்துகொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் சித்தீக் அவர்களால் கடந்த காலங்களில் இந்நூலகத்தின் ஊடாக எவ்வாறு பிரதேசவாசிகள் மற்றும் தமது பிள்ளைகள் பயனடைந்தனர் என விபரிக்கப்பட்டது.மேலும் ஓய்வு பெற்ற அதிபர் அஸீஸ் அவர்களினாலும் , சாந்தி முகைதீன் அவர்களினாலும் மற்றும் ஏனைய சபை உறுப்பினர்களினாலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

நூலகர் முபாரக் அவர்களினால் காத்தான்குடி பொது நூலக அங்கத்தவர்கள் மற்றும் பயனாளிகள் பற்றிய விபரங்களை புள்ளி விபரங்களோடு குறிப்பிட்டமையோடு, மட்டக்களப்பு நூலகத்தோடு ஒப்பிடுகையில் இங்கு மாணவர்கள் அங்கத்துவம் அதிகரித்துக் காணப்படுவதாக குறிப்பிட்டார்.

பயனாளிகளின் தேவைகளை கவனத்தில் கொண்டு அவர்கள் எதிர்பார்க்கின்ற நூல்கள் இங்கு இல்லையாயின் அதனை நூலக உத்தியோகத்தர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கான கையேடுகள் காணப்படுவதாகவும் இதில் அனைவரும் பயனுள்ள நூல்கள் தேவையாயின் குறிப்பிட முடியும் எனவும் கூறினார்.

மேலே நாம் நகர முதல்வர் அவர்கள் உரையாற்றுவதனையும் , சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை பரிமாரிக்கொள்வதனையும் காணலாம்.






Thursday, November 29, 2018

காத்தான்குடி கோட்ட அல்ஹஸனாத் வித்தியாலயத்தின் மாணவர் கௌரவிப்பும் ஆசிரியர் கௌரவிப்பும் - 2018
 












29-11--2018 அன்று காத்தான்குடி கோட்டத்தின் அல்ஹனாத் வித்தியாலயத்தில் வருடாந்த பரிசளிப்பு விழாவும் இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், ஆசிரியர் கௌரவிப்பும் இவ்வித்தியாலயத்தின் அதிபர் எம்.எல்.முஹம்மட் கான் தலைமையில் இடம்பெற்றது.

இதில் முன்னால் மகாசபை உறுப்பினரும், தற்போதைய நகர சபை உறுப்பினருமான பரீட் (JP), காத்தான்குடி கோட்டக் கல்வி அதிகாரியான எம்.ஸி.எம்.ஏ.பதுர்தீன், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான ஏ.ஜி.எம்.ஹகீம், எம்.ஐ.இப்றாஹீம், ஆசிரிய ஆலோசகர்களான எம்.ஆர்.எம்.நவாஸ், எம்.ஐ.அலாவுதீன்,எம்.ஐ.மர்சூக், எம்.ஆர்.ஜவாத், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரான ஏ.எல்.எம்.றிஸ்வி ,  கே.எம்,ஏ.ஸமட் பொறியியலாளர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களான றாபி, ஸாஹிர் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வி கோட்டக் கல்விப் பணிப்பாளர் தனது உரையில் சிறிய பாடசாலையாயினும் தரமான முறையில் மாணவர்களின் நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருப்பதாகவும், அதிபர் , ஆசிரியர்கள், பெற்றார்கள் மற்றும் நலன் விரும்பிகளின் இவ்வாறான முயற்சி பாராட்டத்தக்கது எனவும் குறிப்பிட்டார்.

பெரிய பாடசாலைகளில் தனது குழந்தைகள் கற்பதனையே பெற்றோர்கள் தமது கௌரவமாக கருதுகின்றனர். ஆனால் அதனையும் விட சிறப்பான பயிற்சிகள் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் இவ்வாறான சிறிய பாடசாலைகளிலேயே இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

நகர சபை உறுப்பினரான பரீட் (JP) அவர்கள் தனது உரையில் அல்ஹஸனாத் மற்றும் கைறாத் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளையும் தனது இரு கண்களாக நோக்குவதாகவும் அவற்றுக்கான வளங்களை பெற்றுக்கொடுக்க தான் எப்போதும் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும் இப்பாடசாலையின் மாணவர்களது நிகழ்வுகளை காண்கின்ற போது தனது உளகிடக்கை மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அதிதிகள் அனைவரும் தமது உரையில் இவ்வாறான அழகிய முறையில் மாணவர்களை ஆசிரியர்கள் பயிற்று வித்திருப்பதனை பாராட்டியமையோடு அவர்களின் அர்ப்பணிப்புக்கு இறைவன் நற்கூலிகளை வழங்க வேண்டுமென பிரார்த்தித்தனர்.

மேலே நாம் இப்பாடசாலையின் நிகழ்வுகளையும், அதிதிகளையும் காணலாம்.



Monday, October 22, 2018

மட்/மம/அல்ஹிறா வித்தியாலய வலய மட்ட வெளிவாரி மதிப்பீடு - 2018











கடந்த 22.10.2018ம் திகதி மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட மதிப்பீட்டு நடவடிக்கை மட் / மம / அல் - அல்ஹிறா  வித்தியாலயத்தில் நடைபெற்றது.  இதனை உதவிக்கல்விப் பணிப்பாளர் Mr.T.M.Sஅஹமட் (SLEAS) அவர்கள்  வழிநடாத்தியதோடு, ஏனைய உதவிக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் MACM.பதுர்தீன் அவர்களும் இம்மேற்பார்வை நடவடிக்கையில் இணைந்துகொண்டனர்.

  இதில்  உதவிக்கல்விப் பணிப்பாளர் Mr.T.M.Sஅஹமட் (SLEAS)  அவர்களால்  பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை சிறப்பான முறையில் மேற்கொள்வதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை தமது பாடசாலையில் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் ஆசிரியர்களுக்கு முன்வைக்கப்பட்டன.

இம்மேற்பார் குழுவின் தலைமை அதிகாரியான Mr.T.M.Sஅஹமட் (SLEAS) அவர்கள் காத்தான்குடி கோட்ட கல்வி வளர்ச்சியானது எப்போதும் உயர்நிலையில் உள்ளதாகவும், கடந்த காலங்களில் 2014ம் ஆண்டு எமது வலயம் வீழ்ச்சியான பெறுபேற்றினை பெற்ற போதும் . இப்பிரதேசத்தின் கல்வி நிலை உயர் நிலையில் காணப்பட்டதாக குறிப்பிட்டார்.அதிலும் குறிப்பாக அல்ஹிறா வித்தியாலயதின் பெறுபேறுகள் எப்போதும் உயர்நிலையில் உள்ளதாகவும், அதன் வளர்ச்சி எப்போதும் சிறப்பானது எனவும் கூறினார்.

 இதற்கு இப்பிரதேசத்தின் கோட்டக் கல்வி அதிகாரியான  MACM.பதுர்தீன்  அவர்களின் சிறப்பான மேற்பார்யும் அவர்களது தூர நோக்குமே பிரதான காரணம் என அவர் தெரிவித்தமையோடு, அவரது சிறப்பான பாடசாலை மேற்பார்வையினையும், ஆளுமையினையும் பாராட்டினார்.

இப்பாடசாலையின் சிரேஷட ஆசிரியர் அமீன் அவர்களினால் மேற்பார்வை குழுவினறுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டமையோடு, எமது குறைகளை நாம் உணர்ந்து கொள்ளும் வகையிலும், அவைகளை குறைகளாக கூறுகின்றனர் என ஆசிரியர்களான தாங்கள் அறியாத வகையிலும் மிகவும் கட்சிதமாக, நேர்த்தியாக, ஆசிரியர்களின் மனோநிலையினை உளவியல் ரீதியிரான அனுகுமுறையோடு, முன்வைத்தமைக்கு இம்மேற்பார்வை குழுவின் தலைமை அதிகாரியான Mr.T.M.Sஅஹமட் (SLEAS)  அவர்களுகு ஆசிரியர்கள் சார்பாகவும், பாடசாலையின் நிர்வாகம் சார்பாகவும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மேலும் இப்பாடசாலையானது இம்முறை மேற்பார்வையின் போது 72 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டது.

மேலே இம்மேற்பார்வை நடவடிக்கையில் கலந்து கொண்ட அதிகாரிகளையும், பாடசாலை ஆசரியர்களையும் நாம் காணலாம்.

Thursday, October 18, 2018

மட்டக்களப்பு மத்தி வலயத்தின் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களுக்கான வழுவூட்டல் கருத்தரங்கு - 2018







கடந்த 13.10.2018 ம் திகதி மட்டக்களப்பு மத்தி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களுக்கான வழுவூட்டல் செயலமர்வு காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

பாடசாலை மட்ட வழிகாட்டல் ஆலோசனை வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் செம்மையாக எவ்வாறு கொண்டு செல்வது என்றும், ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வழிகாட்டல் வேலைத்திட்டத்தினை கொண்டு செல்வதற்கான ஆசிரியர் மதிப்பீட்டு படிவங்களும் வழங்கப்பட்டன.

இதன் இணைப்பு அதிகாரியாக காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.பதுர்தீன் அவர்களும், வளவாளர்களாக தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி மற்றும் எம்.பி.எம்.சித்தீக் அவர்களும், வழிகாட்டல் ஆலோசனை ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத் அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலே இதில் பங்கேற்ற அதிகாரிகளையும், ஆசிரிய ஆசிரியர்களினையும் நாம் காணலாம்.

Monday, October 8, 2018

தரம் 9 மாணவர்களுக்கான தொகுதிப்பாட தெரிவுக்கான வழிகாட்டல் செயலமர்வு- 2018








மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் மட் / மம / ரிதிதென்ன இக்றாஃ வித்தியாலய தரம் 09 மாணவர்களுக்கான தெரிவுப்பாடம் தொடர்பான விழிப்பூட்டல் செயலமர்வு கடந்த 08.10.2018 அன்று இப்பாடசாலையில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்களின் பாடத்தெரிவின் மூலம் இன்று அவர்கள் பல்கலைக்கழக, கல்விக் கல்லூரி போன்றவற்றில் நுளைவு செய்யும் வேளையில் பல சந்தர்ப்பங்களினை இழக்க வேண்டிய நிலையேற்படுகின்றது.

சில குறிப்பிட்ட பாடங்களினை மாத்திரம் தெரிவு செய்வதன் காரணமாக இந்நிலைமை அவர்களுக்கு ஏற்படுகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாகவும் மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் விதமாகவும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தினால் தரம் 09 மாணவர்களுக்கான பாடத்தெரிவு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கொன்றினை மட் / மம / ரிதிதென்ன இக்றாஃ வித்தியாலயத்தில் .இடம்பெற்றது.

இதனை மட்டக்களப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திப்பிரிவு ஏற்பாடு செய்திருந்தமையோடு, இதில் வளவாளர்களாக வழிகாட்டல் ஆலோசனை ஆலோசகர் எம்.ஆர்.ஜவாத், தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் எம்.பி.எம்.சித்தீக், மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.றிஸ்வி ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வினை சிறப்பாக நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளினையும் இவ்வித்தியாலயத்தின் அதிபர் திரு.என்.எம்.சஹாப்தீன் அவர்களும், வழிகாட்டல் ஆலோசனை ஆசிரியர்களான திரு ஏ.எல்.எம்.றிபாஸ் மற்றும் திருமதி பஸீரா ஆகியோரால் மேற்கொள்ளப்பட்டிந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலே இதில் கலந்துகொண்ட வளவாளர்களினையும் மாணவர்களையும் நாம் காணலாம்.

Sunday, September 23, 2018

''குழந்தைகளின் உலகம் - முதியோர்கள் '' தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு  நிகழ்ச்சிகளை நடாத்துதல்

 



 
 இன்று எமது இளம் சந்ததியினர் முதியோர் தொடர்பாக பிழையான கருத்துக்களையும், எண்ணங்களினையும் கொண்டு செயற்படுகின்றனர். இவர்களிடம் முதியோர் தொடர்பான பண்புகள் மற்றும் மதிப்புக்கள் அழிந்து சென்று கொண்டிருக்கின்றன.

எமது முதியோர் பற்றிய பண்புகளையும் மதிப்புக்களையும் சிறுவர்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் கடந்த 21.09.2018ம் ஆண்டு காத்தான்குடி பிரதேச செயலகமும், சமூக சேவைத்திணைக்களமும் இணைந்து காத்தான்குடி பிரதேசத்தின் 250 மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கொன்றினை அல்மனார் அறிவியற் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் U.உதய சிறிதர் அவர்களின் தலைமையில் நடாத்தியது.

முதியோர்களின் 60 வயதிற்குப் பின்னரான வாழ்கை எனும் தலைப்பின் கீழ் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி ஆசிரிய மத்திய நிலைய உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தரான A.L.M.றிஸ்வி அவர்கள் விரிவுரையாற்றினார்கள்.

முதியோர் ஆரோக்கியம் (தொற்று நோய்கள், தொற்றா நோய்கள்) எனும் தலைப்பின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய சிறிதர் அவர்கள் விரிவுரையாற்றினார்கள்.

முதியோர்கள் தொடர்பான சமூகத்தின் பொறுப்பு எனும் தலைப்பில் காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி நசுருத்தீன் அவர்கள் விரிவுரையாற்றினார்கள்.

இந்நிகழ்வானது இப்பிரதேசத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் உத்தியோகத்தரான திருமதி.சிவநாயகம் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது. 

அபிவிருத்தி உத்தியோகத்தரான திருமதி சுதர்சினி அவர்களும், பாடசாலையின் ஆசிரிய , ஆசிரியர்களும், மற்றும் சிற்றூழியர்களும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு மாணவர்கள் பயனடைவும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 

மேலே இந்நிகழ்வில் கலந்து கொண்ட உத்தியோகத்தர்களையும், மாணவர்களையும் நாம் காணலாம்.

Wednesday, September 19, 2018

துயரங்களையும் சோதனைகளையும் சகஜமாக எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை முதுமை தருகிறது.


வயதாக வயதாக மகாத்மாவின் கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அவரைச் சுற்றி எவ்வளவு இளம் பெண்கள் மொய்க்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று கவிதாயினி சரோஜினி நாயுடு ஒரு முறை வேடிக்கையாகக் கூறினார்.
உண்மைதான்; வயதாக வயதாக முகத்தில் வசீகரம் கூடுகிறது என்று அண்மையில் செய்யப்பட்ட ஆய்வுகளும் காட்டுகின்றன.
20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களிடம் தம்மைப் பற்றிய உயர்வான எண்ணமும் அந்த வயதுக்கே உரிய கர்வமும் நிறைந்திருக்கின்றன.
30 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்களிடம் அத்தகைய தற்பெருமை படிப்படியாக மறைந்து, கலக்கமும் கவலைகளும் லேசாக இடம்பெறத் தொடங்குகின்றன.
50 வயதுக்கு மேல் மூளையின் செல்கள் சிதையத் தொடங்குகின்றன. மூளையின் செயல்பாடுகள் மந்தமாகின்றன. தீவிரமான உணர்ச்சிகளைத் தூண்டும் சுரப்புகளின் உற்பத்தி குறைகிறது. மனதில் அமைதியும் நிறைவும் ஆசையின்மையும் நிறைகின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 80 வயதை எட்டியவர்களின் மனதில் சுய மதிப்பீடும் சுயாபிமானமும் உச்சத்தை எட்டுகின்றன. ‘இவ்வளவு நாள் வாழ்ந்ததே சாதனை’என்ற பெருமிதம் உண்டாகிறது. அதன் பிரதிபலிப்பு முகத்தில் மகிழ்ச்சியாகவும் மலர்ச்சியாகவும் வெளிப்படுகிறது. கடுமையான வியாதிகளும் வலி - வேதனைகளும்கூட அவர்களுடைய மனநிலையைக் குறைந்த அளவே குலைக்கின்றன.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பலருக்கு, ‘இனிமேல் அதிகாலையில் எழுந்து, அரக்கப்பரக்கக் காலக்கடன்களை முடித்துக்கொண்டு, பஸ்ஸையோ ரயிலையோ பிடிக்க அவசர அவசரமாக ஓட வேண்டிய அவசியமில்லை’என்ற எண்ணமே நிம்மதியையும் மகிழ்ச்சியையும் ஊட்டுகிறது. வருமானம் குறைந்துவிட்டதே என்ற கவலைகூட ஓரளவுக்கு மேல் வருத்துவதில்லை.
புகைப்பட ஆய்வு
ஒரு கூட்டத்தின் ஒளிப்படத்தை இளைஞர்களிடம் காட்டியபோது, அவர்களின் முகங்கள் ஆர்வமில்லாமல் சற்றே சுருங்கின. அதே படத்தை முதியோர்களிடம் காட்டியபோது மலர்ந்த முகத்தோடு மகிழ்ச்சியாக அதை உற்றுப்பார்த்தனர். வயதானவர்களுக்கு துக்கங்களும் கவலைகளும் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. வாழ்க்கைத் துணையை இழக்கும் இளவயதினரைப் போல முதிய வயதினர் துயரத்தில் மூழ்கி நிலைகுலைந்துபோவதில்லை.

தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் அச்சமும் முதியவர்களுக்கு அதிகமாக ஏற்படுவதில்லை. வறுமையும் தனிமையும்கூட அவர்களை அச்சுறுத்துவதில்லை. வாழ்க்கை இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே என்று தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக்கொள்கின்றனர். முயன்றாலும் முடியாது என்ற இயலாமைகுறித்த முழுமையான புரிதலாலும், இனி கவலைப்பட்டு ஏதும் சரியாகிவிடாது என்ற பக்குவத்தாலும் அவர்கள் எளிதில் இயல்புநிலைக்கு வந்துவிடுகிறார்கள். கவலைகள் குறைகின்றன. மகன், மகள் ஆகியோருக்கு இனி தங்களுடைய ஆதரவும் அரவணைப்பும் அவசியமில்லை என்ற யதார்த்தமும் பலருக்குக் கவலைகளைக் குறைத்துவிடுகின்றன. தங்களுடைய குழந்தைகளில் சிலரின் வாழ்க்கை சரியாக இல்லாவிட்டால், ஆரம்பத்தில் கவலைப்படும் முதியவர்கள் காலப்போக்கில், அது அவர்களுடைய தலையெழுத்து என்று கவலையின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்கின்றனர்.
மன இறுக்கம் இல்லை
ஒரு சிலர் விதிவிலக்காக இருந்தாலும், பெரும்பான்மையான முதியவர்கள் மன இறுக்கத்தில் வாழ்வதில்லை. இன்றைய பொழுது நல்ல பொழுதாகக் கழிந்தால் போதும் என்று நினைக்கும் முதியவர்கள், ‘நாளைய பொழுது நம்மிடம் இல்லை’என்று விட்டுவிடுகிறார்கள். பேரக் குழந்தைகளின் முத்தம், கொள்ளுப்பேரன், பேத்திகளின் ஸ்பரிசம் போன்றவை மூளையில் ஆக்சிடோசின் என்ற ரசாயனத்தின் சுரப்பை அதிகப்படுத்துவதால் மெய்ம்மறந்து ரசித்து மகிழ்ச்சியடைகிறார்கள்.

உடலுக்கு ஏற்படும் மூப்பு வேறு, உணர்வுகளுக்கு ஏற்படும் மூப்பு வேறு. அவை இரண்டும் ஒன்றல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். வயதாக வயதாக உடல் வலுவிழப்பதை இயல்பாக எடுத்துக்கொள்கிறார்கள். அதே சமயம், சிறிய செயல்கள்கூட அவர்களுக்கு அதிகமாக மகிழ்ச்சியை அளிக்கின்றன. “நான் இளைஞனாக இருந்தபோது வரைந்த ஓவியத்தைவிட 70 வயதான பிறகு படைத்த ஓவியங்கள்தான் பன்மடங்குச் சிறப்பாக அமைந்தன” என்றார் ஒரு பிரபல ஓவியர். அதற்கு அவருடைய அனுபவமும் நீண்டகாலப் பயிற்சியும்கூடக் காரணமாக இருந்திருக்கலாம்.
துயரக் கணைகள் துளைப்பதில்லை
அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர், தம்மை நோக்கி வரும் வேகப் பந்துகளை வெகு சாமர்த்தியமாகத் திருப்பிவிடுவதைப் போல முதியவர்கள் தங்களை நோக்கி வரும் துயரக் கணைகளை எளிதாகத் திருப்பிவிடும் வல்லமை பெற்றுவிடுகிறார்கள். பெற்றோருக்கு நடுத்தர வயதாக இருக்கும்போது பதின்ம வயதுள்ள குழந்தைகளால் ஏற்படும் பிரச்சினைகள் சிறிது காலம் கழித்துக் குறைந்துவிடுகிறது. பெற்றோர், குழந்தைகள் என்று இரு தரப்பாருக்குமே வயது அதிகமாவதால் முதிர்ச்சியும் மனப் பக்குவமும் அதிகமாகிறது. முதுமைக் காலத்தில் குழந்தைகளுக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் நண்பராகவும் இருப்பது எளிதாகிவிடுகிறது.
பிள்ளைகளின் சிந்தனைகளையும் செயல்களையும் பற்றற்ற கண்ணோட்டத்திலும், பற்றுள்ள பார்வையுடனும் ஒரே நேரத்தில் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. தன்னிடம் ஆலோசனை கேட்டால் மகிழ்ச்சியடைகிறார்கள். கேட்காவிட்டால் கோபமோ வருத்தமோ படுவதில்லை.
அப்பா, அம்மாவிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வோம் என்று பிள்ளை தன் மனைவியிடம் சொல்வது காதில் விழுந்தாலே பெற்றோர் மனம் பூரித்துவிடுகிறது. குடும்ப விவகாரங்களில் முழுமையாகப் பங்கேற்பது அல்லது வெறும் பார்வையாளராக இருப்பது ஆகிய இரண்டுமே சாத்தியமாகிறது. நிதானம் சார்ந்த கிட்டப்பார்வையும் அனுபவம் சார்ந்த தொலைநோக்குப் பார்வையும் முதியவர்களுக்கு ஏக காலத்தில் வாய்க்கின்றன.
வயது முதிர முதிர தோல்விகள் மற்றும் இழப்புகளின் வெம்மை பெரியவர்களிடத்தில் கூர் இழந்துவிடுகிறது. அற்ப விஷயத்துக்கெல்லாம் அலட்டிக்கொள்ளக் கூடாது என்ற நிதானம் வந்துவிடுகிறது. பலனை எதிர்பாராதே, கடமையைச் செய் என்றில்லாமல் - பலன் அதிகமா குறைவா என்று பார்த்துச் செய் என்கிற பக்குவம் வந்துவிடுகிறது. தனித்திறமைகளின் தரம் கூடுகிறது. கவிஞர்களுக்குச் சொல் வளமும் ஆளுமையும் மெருகேறுகின்றன. எழுத்தாளர்களின் படைப்புகளில் தீவிரத்தன்மை குறைந்து கருத்தாழமும் சொற்சிக்கனமும் கைவசப்படுகின்றன.
வயதால் கனியும் மருத்துவர்கள்
டாக்டர்கள் வயதாக வயதாக அதிக சோதனைகளுக்கு அவசியமில்லாமல் நோயின் தன்மை, தீவிரம் போன்றவற்றைக் கணித்துவிடுகிறார்கள். நோயாளியிடம் பரிவும் கனிவும் அதிகமாகிறது. ஆசிரியர்களும் பேராசிரியர்களும் வயது அதிகமானால் கண்டிப்பைக் குறைத்துக்கொண்டு, மாணவர்களின் குறும்பை ரசிக்கும் பக்குவத்தை அதிகம் பெற்றுவிடுகிறார்கள். மேலதிகாரிகளில் பலர், மிடுக்கையும் அதிகார தோரணையையும் குறைத்துக்கொண்டு, சகாக்களின் சிறிய தவறுகளை மன்னித்து, தக்க ஆலோசனைகளைக் கூறத் தொடங்குகிறார்கள். பழைய விரோதங்கள் மறக்கப்படுகின்றன, பழைய குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன.
வாழ்க்கைப் பயணம் நீள நீள ஆங்காங்கே சுமைகள் கழிக்கப்பட்டுப் பயணிப்பது எளிதாகிறது. வயதாக வயதாகப் பல விஷயங்கள் மறந்துபோவது பெரிய பிரச்சினையாகத் தெரிவதில்லை. வயதாகிவிடுகிறபோது எது, எப்படி, எந்த வகையில் நடக்கும் என்கிற புரிந்துணர்வு ஏற்படுகிறது. சின்ன வயதில் நாமும் அப்படித்தானே இருந்தோம் என்னும் நினைவு இளையவர்களிடம் பரிவுகாட்ட வைக்கிறது. எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. அவசரம் குறைந்து நிதானம் கூடுகிறது.

தமது எதிர்காலத்தைப் பற்றி முதியவர்கள் சிந்தனைகூடச் செய்வதில்லை. அவர்களுக்குத் தற்காலம்தான் நிதர்சனம். உடம்பு முடியவில்லையா, ஓய்வு எடு. நடக்க முடியவில்லையா, உட்காரு. உட்காரக்கூட முடியவில்லையா, படுத்துக்கொள். இதுதான் அவர்களுடைய கொள்கை. உற்றார் உறவினர் வீட்டு விசேஷங்களுக்குப் போய்த்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. அந்தக் கடமைகளையெல்லாம் இளைய தலைமுறையிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.
ஓவியர்களும் ஒளிப்படக் கலைஞர்களும் முதுகிழவர்களையும் தொண்டு கிழவிகளையும் தேடிப் பிடித்துப் படமாக்குவது ஏன் என்று இப்போது புரிந்திருக்கும். அந்த முகங்களில் அமைதியையும் கருணையையும் அழகையும் அவர்களால் எளிதில் அடையாளம் காண முடிந்திருக்கிறது.

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...