Thursday, April 12, 2018

கற்றல், கற்பித்தல் செயற்பாடு வகுப்பறையில் வெற்றியளிக்க ஆசிரியர் வகிபங்கு


கற்றல், கற்பித்தல் செயற் பாடுகளைப் பொறுத்தவரையில் பிரதானமான மற்றும் நேரடியான பங்காளிகளாக ஆசிரியரும் மாணவர்களும் காணப்படுகின்றனர். இந்த இருசாராருக்கும் வெவ்வேறான பொறுப்புக்களும் வகிபங்குளும் காணப்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஒரு வகுப்பறையை வழி நடத்துவதில் அதிகளவான பொறுப்பு ஆசிரியருக்கே இருக்கிறது.

ஆசிரியர் கற்றலுக்கு வழிகாட்டுபவர், உதவுபவர், வசதி செய்து கொடுப்பவர், வள இணைப்புச் செய்பவர் என்பவற்றுக்கு இணங்க வகுப்பறைக் கற்றல், கற்பித்தலில் அவரின் பங்களிப்பு முக்கியமானதும் அவசியமானதுமாகும். ஒரு வகுப்பறைக் கற்றல், கற்பித்தல் வெற்றிகரமானதாக அமைவதற்கு ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகளாக பின்வரு வனவற்றை அடையாளப்படுத்தலாம்.

திட்டமிடல்
உரிய பாடத்திற்குரிய பாடத்திட்டத்தை ஆசிரியர் நேரகாலத்துடன் தயார் செய்து வைத்திருப்பதுடன் அதற்கேற்ற வகையில் பாடக் குறிப்பையும் எழுதிக் கொள்ள வேண்டும். கற்பித்தல் உபகரணம், கற்பித்தல் முறை போன்ற விடயங்களையும் ஆசிரியர் திட்டமிட்டுக் கொள்வது அவசியமாகும். § சிறந்த வகுப்பறைச் சூழலை உருவாக்குதல்
மாணவர்கள் விரும்பக்கூடிய வகையில் வகுப்பறைச் சூழலை கவர்ச்சிகரமானதாக மாற்ற வேண்டும். இதனால் மாணவர்களிடம் கற்றல் நடவடிக்கைகளில் ஆர்வத்தை ஏற்படுத்த முடியும். வகுப்பறையிலுள்ள, வகுப் பறைச் சூழிலிலுள்ள கற்றல், கற் பித்தலுக்கு இடைஞ்சலாக உள்ள கவனக் கலைப்பான்களையும் இல் லாமல் செய்ய வேண்டும்.

வகுப்பறை முகாமைத்துவம் பேணல்
மாணவர்களைக் கட்டுக்கோப்புக்குள் வைத்திருப்பதுடன் சரியாகக் கண்காணிக்கவும் வேண்டும். அத்துடன் மாணவர்களை தனது கற்பித்தலின் பக்கம் நிலைத்து வைத்திருக்க அடிக்கடி வினாக்களை மாணவர்களிடம் கேட்டு வகுப்பறை முகாமைத்துவத்தைப் பேண வேண்டும். § எல்லா வித மான மாணவர்களையும் கருத்திற் கொண்டு கற்பித்தல்
வகுப்பிலுள்ள மீத்திறன் கூடிய மாணவர்கள், மெல்லக் கற்போர், சாதாரண மாணவர்கள் போன்ற அனைவரையும் கருத்திற் கொண்டு எல்லோருக்கும் விளங்கக்கூடிய விதத்திலும் உச்சரிப்புக்களையும் வார்த்தைப் பிரயோகங்களையும் சரியாக உபயோகித்து சத்தமாகவும் எல்லோருக்கும் விளங்கும் வகையிலும் கற்பிக்க வேண்டும். பட அட்டைகள் எழுத்தட்டைகள் என்பனவற்றை காட்சிப்படுத்தும் போது எல்லா மாணவர்களுக்கும் தெரியக்கூடிய விதத்தில் காட்சிப்படுத்த வேண்டும்.

பொருத்தமான கற்பித்தல் சாதனங்களை சரியாகப் பயன்படுத்தல்
பொதுவாகக் கற்பிக்கும் போது சில விடயங்களை மாணவர்களுக்கு விளக்க பொருத்தமான கற்பித்தல் சாதனங்களை உரிய முறையில் ஆசிரியர் பயன்படுத்த வேண்டும். உதாரணமாக முக்கிய விடயங்களை கரும்பலகையில் எழுதிக் காட்டல் அல்லது பட அட்டைகள், வரைபுகள் என்பனவற்றைக் கொண்டு விளக்கலாம். அல்லது பல்லூடகக் கருவி (Multi Media) போன்ற நவீன சாத னங்களைக் கொண்டு கற்பிக்கும் போது மாணவர்களின் ஆர்வம் அதிகரி ப்பதுடன் கற்பித்தல் இலகுவாகவும் அமையும். உதாரணமாக ஞாயிற்றுத் தொகுதி பற்றி கற்பிக்கும் போது அதனை வரைந்து அல்லது நவீன சாதனங்களின் மூலம் படமாக காட்டி விளக்கலாம்.

ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்கல் Guide and Counseling
தறவான நடத்தைகளைக் கொண்டிருக்கும் மாணவர்களை இனங்கண்டு அவர்கள் தவறை உணர்ந்து கொள்ளும் வகையில் ஆலோசனையும் வழிகாட்டலும் வழங்க வேண்டும். இந்நடவடிக்கையின் போது ஏனைய மாணவர்களுக்கு முன்னால் அவர்களை கெட்டவர்களாக காட்டும் நடவடிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஆலோசனையும் வழிகாட்டலும் வகுப்பறை கற்றல், கற்பித்தலை மேலும் வெற்றி கரமானதாக மாற்றும்.

பயிற்சிகளை வழங்குதலும்திருத்துதலும்
கற்பிக்கப்பட்ட பாடப்பரப்பில் இருந்து பொருத்தமான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கி அவர்களால் அளிக்கப்பட்ட விடைகளை திருத்தி எந்தளவு குறிப்பிட்ட பாடத்தை மாணவர்கள் விளங்கியுள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இது பின்னூட்டல் வழங்குவதற்கு உதவும்.

பின்னூட்டல் வழங்கல்
பாட இறுதியில் மாணவர்களின் அடைவுகளை மதிப்பிட்டு அவர்கள் விளங்கியுள்ள விதத்திற்கேற்ப பின்னூட்டலை வழங்கி உரிய பாடப்பரப்பில் மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிக்கச் செய்ய உதவுவதும் ஆசிரியரின் கடப்பாடாகும்.
வகுப்பறை விதிமுறைகளை ஏற்படுத்தல்
வகுப்பறையில் நல்ல நடவடிக்கைகளை கடைப்பிடிக்கவும் கெட்ட விடயங்களை தவிர்த்துக் கொள்ளவும் கூடிய வகையில் மாணவர்களின் ஒத்துழைப்புடன் அவர்களுடைய ஆலோசனைப்படி சில வகுப்பறை விதிமுறைகளை ஏற்படுத்தலாம். மாணவர்கள் தாங்கள் உருவாக்கிய விதிமுறைகள் என்ற வகையில் அவற்றை கடைப்பிடிக்க முன்வருவர். இது வகுப்பறை முகாமைத்துவத்தை பேணவும் உதவும்.

கேட்புலத் தொடர்பை ஏற்படுத்தல்
பிரச்சினைக்குரிய மாணவர்களை அதிகம் கண்காணிக்கக் கூடியவராக ஆசிரியர் இருக்க வேண்டும். மாணவனின் கெட்ட பழக்க வழக்கங்கள் தனக்கு பிடிக்கவில்லை என்பதை பார்வையினூடாக மாணவனுக்கு உணர்த்த வேண்டும். இதன் மூலம் கற்றலின் பக்கம் அம்மாணவனை திசை திருப்ப முடியும்.

பரிசு, பாராட்டு வழங்குதல்
நல்ல விடயங்களைச் செய்கின்ற மாணவர்களைப் பாராட்டுவதுடன் சில விடயங்கள் தொடர்பாக போட்டிகளை ஏற்படுத்தி பரிசில்களையும் வழங்கலாம். இதனால் மாணவர்கள் நல்ல விடயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடவும் வாய்ப்பு ஏற்படும். இது போன்ற நடவடிக்கைகளை ஆசிரியர் தனது வகிபாங்கில் ஏற்படுத்திக் கொள்வதனால் மாணவர்களின் நன்னடத்தைகளை விருத்தி செய்வதுடன் பொருத்தமற்ற நடத்தைகளை நன்னடத்தையாகவும் மாற்ற முடியும். அத்தோடு கற்றல், கற்பித்தலையும் ஊக்குவிக்க முடியும்.

மாணவர்களின் சந்தேக நிவர்த்திக்கு நேரம் ஒதுக்குதல்
கற்பிக்கும் போது மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ஆசிரியர் நேரம் ஒதுக்க வேண்டும். கற்ற பாடம் தொடர்பாக பல சந்தேகங்கள் மாணவர்களுக்கு இருக்கலாம். அவ்வாறான சந்தேகங்களை ஆசிரியரிடம் மாணவர்கள் கேட்டு அதற்கு ஆசிரியர் பதிலளிக்க நேரம் ஒதுக்குவது ஆசிரியரின் கடப்பாடாகும்.

மாணவர்களுக்கு பொறுப்பு வழங்கல்
மாணவர்களுக்கு பொறுப்புக்களை வழங்குவதன் மூலம் அவர்களை குறிப்பிட்ட விடயங்களில் ஆர்வம் உடையவர்களாகவும் நன்னடத்தை உடையவர்களாகவும் மாற்ற முடியும். மேலும் வகுப்பறை நடவடிக்கைகளில் மாணவர்கள் பொறுப்புடனும் சுறுசுறுப்பாகவும் செயற்படவும் இது உதவும்.

சுய கற்றலுக்கு ஊக்கமளித்தல்
ஆசிரியரின் கற்பித்தலில் மாத்திரம் மாணவர்கள் தங்கி நிற்காமல் சுயமான கற்றலுக்கும் வழிகாட்டல்களை ஆசிரியர் வழங்க வேண்டும். கற்றலோடு தொடர்புடைய பத்திரிகைகளை சஞ்சிகைகள், புத்தகங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்வதோடு அவற்றை வாசிப்பதற்கும் ஆர்வமூட்டி வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். வகுப்பறையில் வாசிப்பு மூலை ஒன்றை உருவாக்கி அங்கு புத்தகங்களையும் வைக்கலாம். இது மாணவர்களின் சுய கற்றலை அதிகரிக்கச் செய்யும்.

தொடர் மதிப்பீடும் கணிப்பீடும்
மாணவர்களை தொடராக கற்றல், கற்பித்தலில் ஈடுபடுத்த தொடர் மதிப்பீடுகளையும் கணிப்பீடுகளையும் செய்வது உதவும். மாணவர்களின் முழு அளவிலான அடைவினை இதன் மூலம் அறிந்து அதற்கேற்ற வகையில் மேலும் சில திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் இது உதவும்.

No comments:

Post a Comment

  தேசிய கல்வி நிறுவகத்தின் பாரம்பரிய மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஊடாக அரபு மொழிப் பாடத்திற்கான மொடியூல் தயாரிக்கும் செயற்திட்டத்திட...